 Shanmugam Sivalingam (aka) Stephen Master is a wellknown Sri Lankan Tamil Writer.
அறிமுகம் படைப்புகள் நூல் முன்னுரைஇணையத்தில் சண்முகம் சிவலிங்கம்
Contact Me
|
(சண்முகம் சிவலிங்கம் 'நீர்வளையங்கள்' கவிதைத் தொகுப்பில் எழுதிய கட்டுரை)
எனது கவிதைகள் பற்றி நான் எதுவும் இந்த தொகுதியில் எழுதுவது அவசியமில்லை என்றே (இதை எழுதும்) இரண்டு நாட்களுக்கு முன்புவரை எண்ணியிருந்தேன். உண்மையில் நண்பர் நு·மானுக்கும் என் ஆழ்ந்த அன்புக்குரிய திரு.ஆர். பத்மநாப ஐயருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக "வெளிச்சத்துக்கு வருதல்" என்னும் சில வரிகளை முகப்பு வெற்றிலையாக அமைத்திருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு பரிதாபத்துக்குரிய என் நாட்டில் நடந்த சில சம்பவங்கள் என் முடிவை அடியோடு மாற்றிவிட்டன.
எனது நாட்டின் இலக்கிய வரலாற்றில் அறுபதாம் ஆண்டுகள் மிக முக்கியமானவை.எழுபதாம் ஆண்டுகள், குறிப்பாக எழுபத்திரெண்டுக்கு பிற்பட்ட தசாப்தப்பகுதி அறுபதுகளில் ஏற்பட்ட சில வளர்ச்சிப் போக்குகளை நிதானிப்பதாகவும், மறுகண்ணோட்டம் செலுத்துவதாகவும் அமைந்தது. எண்பதுகளில், 83க்கு பிற்பட்ட காத்திரமான படைப்புகள் ஒரு திடீர் திருப்பம் பெற்றவைகளாக அமைந்தன. இந்தப் போக்குகள், இலங்கையின் பொதுத் தேசிய உணர்வோட்ட பரிணாமத்திலிருந்து, இன ஒடுக்குமுறையின் காரணமாக எழுச்சி பெற்ற தமிழ் தேசியவாத வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டவை என்பது இன்று எல்லோரும் கிரகித்துக் கொள்ளகூடிய ஒன்று.
என்னுடைய முன்னுரைப் பிரச்சினை 83க்கு பிற்பட்ட வளர்ச்சிப் போக்கால் ஏற்படுகிறது. முக்கியமாக 87க்கு பிற்பட்ட இன்றைய நெருக்கடி நிலைமை தொடர்பானது. 87க்கு பிற்பட்ட நெருக்கடி சிலவேளை 83க்கும் 86க்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து வேறுபடாததொரு தோற்றம் காட்டுவதால் மொத்தமாக இன்று 83க்கு பிற்பட்ட தேசிய பிராந்திய நிகழ்வுகளைப் பொறுத்தமட்டில் 'ஆமை போல் ஐந்தடக்கி' ஊமையாக வேண்டியுள்ளது. 1970ல் எழுதப்பட்டு எப்படியும் 83க்கு முன்பு யேசுராசாவின் 'அலை'யில் வெளிவந்திருக்கக்கூடிய எனது 'வெளியார் வருகை' இதில் சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி சற்று முன்புவரை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. உண்மையான கருத்துச் சுதந்திரம் பெயரளவில் கூட இல்லாத இந்த பயங்கரமான நாட்களில், எனது 'வெளியார் வருகை' 1970ம் ஆண்டின் ஓர் அதிகாலைக் கனவு என்பதை இன்று யாராவது நம்ப மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 87க்கு முன்பு 'மரணத்துள் வாழ்வோம்' தொகுத்த யேசுராசா முதலியோர் எனது 'வெளியார் வருகை'யின் கடைசிச் சொற்கள் இரண்டையும் தமது தொகுதிக்கு ஏற்ற நாமமாக தெரிவு செய்திருந்தாலும் அந்தக் கவிதையை அவர்கள் அதன் கால அடைவு காரணமாக அன்று புரக்கணிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று அது அவர்களால் முடியுமா என்பது சந்தேகம். அத்தகைய ஒரு மயக்கநிலை இன்று உருவாகியுள்ளது.
இந்த நிலையில் வாசகர்கள், குறிப்பாக தமிழ் நாட்டு வாசகர்கள். இந்த தொகுதியை இலங்கைத் தமிழ் தேசியப் போராட்டத்துடன் அவ்வளாவு சம்பந்தப்படாத 83க்கு முந்திய கவிதைகளாகவே கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஆமை போல் ஐந்தடக்கிய அந்த ஊமைக் குரல்கள் பின்னொரு நாளில் வெளி வரக்கூடும். 83க்கும் 87க்கும் பிற்பட்ட கவிதைகள் ஒரு கால நிறைவுக்காக இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதான் நான் முக்கியமாக சொல்ல விரும்பியது. வேறென்ன சொல்வது? எல்லோரும் சொல்வது போல நானும் சொல்லலாம்: இந்த கவிதைகளில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. வேதனையும் விரக்திகளும் உண்டு, அவை தந்த வெளிச்சங்களும் உண்டு. இந்த வெளிச்சங்களைத்தான் நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். இன்பத்தினூடும் துன்பத்தினூடும், வேதனையூடும் விரக்தியினூடும் வரும் எனது வெளிச்சத்தைக் காணுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை. வெளிச்சம் ஒன்றைத் தருவதுதான் ஒரு கலைப் படைப்பின் வாழ்தலுக்கான நியாயம் என நான் கருதுகிறேன். எனது, 'காற்றிடையே'வில் என்ன வெளிச்சத்தைக் காண்கிறீர்கள், எனது 'நண்டும் முள்முருக்கு'வில் என்ன வெளிச்சத்தைக் காண்பீர்கள் என்பதெல்லாம் எனக்கு முக்கியம். இருத்தலும், இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும்கூட முக்கியமான வெளிச்சங்கள் எனப்து வெளிச்சமானால் சரி. எனது 'சனங்கள்'இல் கூட வெளிச்சத்தைக் காணாதவர்கள் முன்பு இருந்தார்கள். இப்போது எப்படியோ? எனது கவிதைகளில் சிலது கருகலானவை எனச் சொல்பவர்கள் பலர். அவர்களை நோக்கியே 'கறுத்த புள்ளிகளை' எழுதினேன். கறுத்தப் புள்ளிகள் அவர்களுக்கு இன்னும் கருகலாகத் தெரியக்கூடும். 'மென்மையின் தளைகள்' சற்றுக்கூடுதலான உள் இடைவெளிகளை உடையவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அந்த வினாடிகளின் அழுத்தமும் அமுக்கமும், தொலைவும் தொலைவுக் சுருக்கமும் அப்படி. உள் இடைவெளிகளின் ஊகமும் உள்ளுணர்வுமே சிலவேளை வாசகனின் வெளிச்சமாய் அமையக்கூடும்.
இந்தத் தொகுதி வருவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தவர் (என் தொடர்புகள் சம்பந்தப்பட்ட மட்டில்) என் பெருமதிப்புக்குரிய திரு.பத்மநாப ஐயர் அவர்கள். இலங்கைத் தமிழ்நூல் வெளியீட்டில் அவரும் யேசுராசாவும் ஆற்றியுள்ள பணி கணிசமானது. எனக்கும் ஐயருக்குமிடையில் ஒரு பாலமாய் அமைந்த நண்பர் நு·மான் என்னுடைய கவிதைகளின் உள்ளும் புறமுமான உணர்வுகளில் பல இடங்களில் நுழைகிறார். எனது விலகிச் செல்லும் மையங்களில் அவரும் ஒன்று. இந்தத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதி உதவுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இருவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தக் கவிதைகளில் சில ஜீவாவின் 'மல்லிகை'யிலும், சேரனின் ஆதரவில் 'புதுசு'விலும் யேசுராசாவின் 'அலை'யிலும், நு·மானும் நானும் வெளியிட்ட 'கவிஞர்' இலும்வெளிவந்தன. இவர்களுக்கும், மற்றும் இதனை வெளியிட முன்வந்த தமிழியல் பதிப்பகத்தாருக்கும் இதனை நல்ல முறையில் அச்சிடும் பணியில் ஈடுபட்ட மிதிலா அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள் உரியன.
-சண்முகம் சிவலிங்கம்
'அமலபதி' பாண்டிருப்பு கல்முனை (இலங்கை)
('நீர்வளையங்கள்', தமிழியல், சென்னை)
ச.சி. @ 12/15/2003 முகப்பு
சசியும் அவரது கவிதைகளும் - 1
(எழுத்தாளர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் 'நீர்வளையங்கள்' கவிதைத் தொகுப்பில் எம்.ஏ.நுஹ்மான் எழுதிய முன்னுரை)சமகாலத் தமிழ்க் கவிதையில் அதிக பரிச்சயமும், ஆழ்ந்த கலை உணர்வும் உள்ள வாசகனுக்கு சண்முகம் சிவலிங்கத்தின் (சசி) கவிதைகள், அவை பற்றி நான் சொல்வதை விட அதிகமாகவே சொல்ல வல்லன. என்றாலும் சசிக்கும் எனக்கும் இடையேயுள்ள தொடர்பின் காரணமாகவும் நீண்ட காலமாக நானே அவரது முதல் வாசகனாக இருந்தவன் என்பதனாலும் அவரைப்பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் ஓர் அறிமுகக் குறிப்பாக சிலவற்றைக் கூறலாம் என்று நினைக்கிறேன். சசியே சொல்வது போன்று அவரது கவிதைகளில் "உள்ளும் புறமுமான உணர்வுகளில் பல இடங்களில் நுழைந்திருப்பவன்" நான் நீர் வளையங்களில் அவர் விளிக்கும் நண்பன் நான்தான். நாங்கள் இரு தும்பிகளில் வரும் இரண்டாம் தும்பியும் நாந்தான். பரவளைவுக் கோட்டிலும் நான் இருக்கிறேன். விலகிச் செல்லும் மையங்கள் என்னை நோக்கியதுதான். அந்த அளவுக்கு சசியும் நானும் நெருங்கி இருந்திருக்கிறோம். அவர் எனது நண்பர். என்னைவிட ஐந்து வயது அதிகமான - எனினும் தோற்றத்தில் என்னைவிட ஐந்துவயதேனும் குறைவான நண்பர். அறுபதுகளின் பின் அரைவாசியில் நாங்கள் சந்தித்தோம். கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் கவிதை எங்கள் நட்பை வளர்த்திருக்கிறது. 1969ல் நாங்கள் இருவரும் சேர்ந்து கவிஞன் என்ற காலாண்டு இதழை வெளியிட்டோம். அதன் வெளியீட்டில் என்னைவிட அதிக பங்கு வகித்தவர் சசி. தன் முனைப்பு அற்ற தன்னை ஒளித்துக்கொள்ளும் அவரது சுபாவத்தின் காரணமாக அதன் தொகுப்பாளராக எனது பெயரே இடம்பெற நேர்ந்தது. அவரது ஆரம்ப காலத்தில் எனது பாதிப்பு தன்னில் இருப்பதாகவு அவரே கூறும்போதிலும் எனது ஆதர்சமாகவும் நான் விரும்பி வியந்து படிக்கும் கவிஞராகவும் அவர் விரைவாகவே வளர்ந்துவிட்டார் (எனினும் கவிதையில் எனது பாணி வேறாகவும் அவரது பாணி வேறாகவுமே இருந்து வருகின்றது. எங்கள் தனித்துவம் அப்படி.) இன்று தனது விலகிச் செல்லும் மையங்களில் என்னையும் ஒன்றாக அவர் கருதிய போதிலும் அது ஒரு பிரமைதான். என்னைப் பொறுத்தவரை இன்றும் அவர் என் நெருங்கிய நண்பர்தான். நான் மனம் நெகிழ்ந்து நினைவு கூறும் மிகச் சில நண்பர்களுள் அவரும் ஒருவர். சண்முகம் சிவலிங்கம் கிழக்கிலங்கையில் பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் 1939ல் பிறந்தவர். அவர் பிறந்தது ஒரு வைதீக இந்துக் குடும்பத்தில். அவரதுபெயரே அதைச்சொல்லும். ஆனால் இளம் வயதில்-பாடசாலை காலத்திலேயே- கத்தோலிக்கராக மதம் மாறியவர். (விலகிச் செல்லும் மையங்களில் அவர் குறிப்பிடும், பதினொரு வயதில் அவரை ஊடுருவிய நாடிவாலாவின் செல்வாக்கு அதற்குக் காரணமாக இருக்கலாம்.) அதன் பொருட்டு வீட்டில் அடி உதைகள் வாங்கியவர். ஒரு கத்தோலிக்க குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். ஆறு ஆண் பிள்ளாஇகளின் தகப்பன். அவரது கிராமத்தில் ஸ்ரீபன்(மாஸ்டர்) என்ற கிறிஸ்தவப் பெயராலேயே இன்றைக்கும் பலர் அவரை அறிந்து வைத்திருக்கின்றனர். கேரளத்தில் படித்து விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர் அவர். கடந்த 25 ஆண்டுகளாக விஞ்ஞான ஆசிரியராக தொழில் புரிபவர். தத்துவார்த்த ரீதியில் ஒரு பொறுள்முதல்வாதியாக பரிணமித்திருக்கிறார். அவரது கவிதைகள் பலவற்றின்-- குறிப்பாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆதாம்கள் ஆயிரம், எமது பாடுகளின் நினைவாக போன்றவற்றின் அனுபவ அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாவும் அவரது கவிதைகளில் பரவிக் காணப்படும் விஞ்ஞானக் குறியீடுகளின் பின்னணியை விளங்கிக்கொள்ளவும் அவரைப்பற்றிய இந்தச் சிறுகுறிப்பு உதவக்கூடும். பகுதி - 2
ச.சி. @ 12/25/2003 முகப்பு
சசியும் அவரது கவிதைகளும் - 2
தற்காலத் தமிழ் கவிதையில் சற்றுப் பரிச்சயம் உடையவர்கள் சசியின் கவிதைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கொள்வர். அவரைப்போல் பிறிதொரு கவிஞரை, அவருடையதைப்போல் பிறிதொருவருடைய கவிதையை அடையாளம்காட்டுவது கடினம். அவருடைய தனித்துவம் அப்படி. தனித்துவமான இலங்கைத் தமிழ்க்கவிதை மரபின் ஒரு தீவிர வளர்ச்சி நிலையை-பாய்ச்சலை இவரது கவிதைகளில் காணமுடிகிறது. அறுபதுகளின் பின் அரைவாசியில்தான் சசி கவிதை எழுதத்தொடங்கினார். அவர் ஆரம்பத்தில் எழுதிய சில கவிதைகளில் சற்றுச் செந்நெறிப் பாங்கான(classical) நடையினைக்காணமுடியும். 'கண்படுவரை நீள் கரைவாகு வட்டை' எனத் தொடங்கும் கவிதை அவ்வகையில் நான் படித்த அவரது முதலாவது கவிதை என்று நினைக்கிறேன். அது இத்தொகுப்பில் இடம் பெறவில்லை. இத்தொகுப்பில் உள்ள 'அவள் நினைவிலும்' இதன் சாயலைப் பார்க்கலாம். 'இளைய சிவப்பரும்புகளில் இலை மறையும் புதுரோசா', 'பளபளென்ற சிவப்பு நிறப் பரல் கல்லில் நீரோடும்.' இதன் மொழிதான் செந்நெறிப் பாங்கானதாக இருக்கின்றதே தவிர இக்கவிதை- இதன் அமைப்பு-தமிழுக்கு மிகவும் புதிது. செந்நெறிப் பாங்கு சசி கவிதைகளின் ஒரு பண்பல்ல. இத்தொகுதியில் அத்தகைய கவிதைகள் அவள் நினைவு ஒன்றுதான். அதுகூட முற்றிலும் செந்நெறிப்பாங்கானது அல்ல. பொதுவாக அவரது மொழி மிகச் சாதாரணமான இன்றைய நடைமுறைத் தமிழ்தான். "நீ வந்திருக்கிறாய் நான் எழுதவேண்டும் ஏன்? நீயே எனது மையமா?" என்று தொடங்குகிறது ஒரு கவிதை. "அற்ப நிகழ்வும் அர்த்த மற்றதும் என்னுடன் வருக" இவ்வாறு தொடங்குகிறது பிறிதொரு கவிதை. "எல்லாம் முடிந்தது இனி என்ன, நாம் நடப்போம்" என்று தொடங்குகின்றது வேறொரு கவிதை. "சந்தியில் நிற்கிறேன் பகல் சாய்கிறது"என்பது இன்னொரு கவிதையின் தொடக்கம். இப்படி பெரும்பாலும் சாதாரணமொழிதான் (Plain language). ஆனால் இந்தச் சாதாரண மொழியில் அசாதாரண உணர்வுகளை எழுப்பி அந்த மொழிக்கு ஒரு அசாதாரணத் தன்மையை, ஒரு கனதியை, வேறு ஒரு பரிமாணத்தை கொடுப்பன அவரது கவிதைகள். இது மகாகவி, நீலாவாணன், முருகையன் போன்றோர் மூலம் ஈழத்தில் வளர்ச்சியடைந்த ஒரு கவிதை மரபின் தொடர்ச்சி. சண்முகம் சிவலிங்கம் இம்மரபின் உண்மையான வாரிசுகளுள் ஒருவர். அதற்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்தவர். ஈழத்தில் வளர்ந்த இம்மரபு தமிழகத்தில் வளர்ந்த பாரதிதாசன் பரம்பரையினரின் சத்தற்ற எளிய செய்யுள் மரபில் இருந்து வேறானது. இதற்கு எதிராக 'எழுத்து' வளர்த்த புரியாத இருண்மைக் கவி மரபில் இருந்தும் வேறானது. பிற்காலத்தில் வானம்பாடிக் குழுவினர் வளர்த்த ஜனரஞ்சகமான அலங்கார வசன மரபில் இருந்தும் வேறானது இந்தக் கவிதைகள் முதல் பார்வையில் மிகச் சாதாரணமாக - Plainஆக- தெரியக்கூடும். ஆனால் இவற்றைப் போலியாகப் பிரதிபண்ண முடியாது. இவை எளிமையாகத் தோன்றினாலும் இது ஏமாற்றும் எளிமை. இதை உண்மையான கவிதையின் ஒரு லட்சணமாகவும் சொல்லலாம். பகுதி - 3
ச.சி. @ 12/26/2003 முகப்பு
சசியும் அவரது கவிதைகளும் - 3
தற்காலத் தமிழ்க்கவிதைபற்றிப் பேசுபவர்கள் மரபுக் கவிதை என்ற இருமைமுரண்பற்றி இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். சசிகூட புதுக்கவிதை, அகலித்த புதுக்கவிதை பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை இந்த இருமை முரண் இப்போது அபத்தமாகவே தோன்றுகிறது. இந்த இருமை முரணின் அடிப்படை என்ன? வேறு எதைச் சொன்னாலும் சாராம்சத்தில் யாப்பும் யாப்பின்மையும்தான். யாப்பில் எழுதுவது மரபுக் கவிதை. யாப்பை மீறி எழுதுவது புதுக்கவிதை. புதுக்கவிதையாளர்கள் மரபுக்கவிதையை ஒரு பத்தாம் பசலியாகவே நோக்குகின்றனர். மரபுக்கவிஞர்கள் புதுக்கவிதையை ஒரு சவலைக்குழந்தையாகவே பார்க்கின்றனர். இன்றுகூட இந்த நோக்கு, கவிதை பற்றிய நம் விமர்சனப் பார்வையைப் பெரிதும் பாதிக்கவே செய்கின்றது. சரி. சசி ஒரு மரபுக்கவிஞரா? புதுக்கவிஞரா? இந்தத்தொகுப்பில் உள்ள சுமார் அரைவாசிக் கவிதைகள் சுத்தமான யாப்பில்- வெண்பா, அகவல், விருத்தம் போன்ற செய்யுள்வடிவங்களில் - அமைந்தவை. ஏனைய கவிதைகளும் பெரியும் "யாப்பை இடையிட்டவை"தான். இதே காரணத்துகாக சசி யாப்பை (பத்தாம்பசலித்தனமாகக்)கையாளும் மரபுக் கவிஞர்களுள் ஒருவராகிவிடமாட்டார். யாப்பில் பரிச்சயமில்லாதவர்களுக்கு சசியும் யாப்பை நிராகரித்து கவிதை எழுதும் ஒரு புதுக் கவிதைக்காரர்தான். என்னைப் பொறுத்தவரை சரி இரண்டும் இல்லை, அவர் ஒரு கவிஞர். மரபுவழிச் சிந்தனை முறையில் இருந்தும், வெளிப்பாட்டுமுறையில் இருந்தும் விலகி, நவீன வாழ்வின் நெருக்கடிகளை நவீன முறையில் வெளிப்படுத்தும் ஒரு நவீன கவிஞர். யாப்பிலே எந்த அளவுக்கு மோசமான கவிதைகள் உள்ளனவோ அந்த அளாவுக்கு - சிலவேளை அதைவிட அதிகமாக- யாப்பை மீறி, வசனத்தில் எழுதப்பட்டவற்றிலும் மோசமானவை உண்டு. ஆகவே யாப்பு அல்லது யாப்பின்மைக்கு தானே ஒரு கவித்துவத் தன்மை இல்லை. செய்யுளும் வசனமும் கவிதைக்கான ஊடகங்கள்(medium) மட்டும்தான். ஊடகம், தானே கவிதையாவதில்லை. அது கவிதையைத் தாங்கி நிற்கும் சாதனம் அவ்வளவுதான். கவிதை என்பது கவிதைப்பொருளும், பொருளின் வெளிப்பாட்டு முறையும் இணைந்த ஒன்று. வெளிப்பாடு முறைதான் கவிதைப்பொருளுக்கு ஒரு கவித்துவத் தன்மையைக் கொடுக்கின்றதே தவிர செய்யுள் அல்லது வசனம் என்ற ஊடகம் அல்ல. - எம்.ஏ.நு·மான் பகுதி - 3
ச.சி. @ 12/27/2003 முகப்பு
சசியும் அவரது கவிதைகளும் - 4
இத்தொகுப்பில் சண்முகம் சிவலிங்கத்தின் 54 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் 1967 முதல் 1988 வரையுள்ள கடந்த 22 ஆண்டுகாலத்தில் எழுதப்பட்டவை. இந்த இரண்டு தசாப்தங்களில் கவிஞருக்குள்ளும் கவிஞருக்கு வெளியே சமூகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சிகளை, மாற்றங்களை இந்தக் கவிதைகளில் நம்மால் இனம்காணமுடிகிறது. 1960கள் ஈழத்து இலக்கிய வரலாற்றில் முற்போக்கு இலக்கியக் கோட்பாடு ஆதிக்கம் செலுத்திய காலம். 70களிலும் இதன் தொடர்ச்சி இருந்தது. இது அன்றைய சமூக, அரசியல் நிலைமைகளின் இலக்கிய வெளிப்பாடு. சமூக முரண்பாடுகள், வர்க்கப்போராட்டம், சமூக மாற்றம், புரட்சி சோசலிசம் என்பது எமது இலக்கியத்தின் உள்ளீடாக இருந்த காலம் அது. இக்காலத்தில் இதற்கு எதிரான, இதிலிருந்து விலகிய போக்குகள் இருந்தன. எனினும் இலக்கியத்தில் இதுவே ஆதிக்கப் போக்கும் எனலாம். இக்கால கட்டத்தில் எழுதப்பட்ட சசியின் பெரும்பாலான கவிதைகள் இப்போக்கினைப் பிரதிபலிக்கின்றன. சமூகப்பிரக்ஞையும், புரட்சிகர அரசியல் நோக்கும் அவற்றின் உள்ளீடாக உள்ளன. புதைந்து வருகிறோம். ஆலம் இலைகள், சனங்கள், சந்தியிலே நிற்கிறேன், எகிப்தின் தெருக்களிலே, ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆதாம்கள் ஆயிரம், ஆக்காண்டி, இருட்டுக் குரல்கள், வெளியார் வருகை, மண்ணில் முளைக்கும் வால் நட்சத்திரம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இக்கால கட்டத்தில் இங்கு பெருமளவில் எழுதப்பட்ட கட்டுரைப் பாங்கான, கோஷ நடை சார்ந்த படைப்புகளில் இருந்து சசியின் கவிதைகள் அவற்றின் அழகியல் வீச்சிலும் ஆழத்திலும் எவ்வளவோ உயரத்தில் இருப்பதை ஒரு நல்ல வாசகம் எளிதில் கண்டு கொள்வான். 1970களின் பிற்பகுதியில் இருந்து குறிப்பாக 1977க்குப் பிந்திய கடந்த பத்து ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ் கவிதையின் உள்ளீடு பெரிதும் மாறியிருக்கின்றது. கடந்த பல தசாப்தங்களில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் இன ஒதுக்கல் நடைமுறைகளின் விளைவாக வளர்ச்சியடைந்த தமிழ்த்தேசியவாதம் இக்காலப்பகுதியிலேயே ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட வடிவத்தை எடுத்தது. ராணுவ ஒடுக்கு முறையும், ஆயுதப்போராட்டமும் ஏற்படுத்திய சமூகவிளைவுகளின் எதிரொலிகளே கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத்தமிழ் கவிதையின் பிரதான பொருளாகியது. இத்தகைய கவிதைகளைக் கொண்ட பல தொகுப்புகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. சேரன், ஜெயபாலன் போன்ற சில நல்ல கவிஞர்களை இக்காலகட்டம் உருவாக்கியுள்ளது. 1980களில் சசியும் இக்காலகட்டத்தின் உணர்வுகளை தன் பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய 12 கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இன்றைய வாழ்நிலையின் குரூரமான பல அம்சங்களை அவை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, பாடாத பாடல்கள், இப்போது, பிள்ளைக்கறி ஆகியவை இன்றைய வாழ்நிலையின் குரூரம் பற்றிய மனதை உறுத்தும் படிமங்களைக் கொண்டுள்ள வீச்சான கவிதைகளாகும். இத்தகைய தாக்கமான இன்னும் பல கவிதைகளை சசி இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. சசியே சொல்வதுபோல் "உண்மையான கருத்துச் சுதந்திரம் பெயரளவில்கூட இல்லாத இந்தப் பயங்கரமான நாட்களில் ஆமை போல் ஐந்தடங்கி ஊமையாக" இருக்க நிர்ப்பந்திக்கும் உள்ளச்சமே இதற்குக் காரணமாகும். - எம்.ஏ.நு·மான் பகுதி - 5
ச.சி. @ 12/28/2003 முகப்பு
|
|
|