Shanmugam Sivalingam (aka) Stephen Master is a wellknown Sri Lankan Tamil Writer.


Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:


rss feed
<< December 2003 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05 06
07 08 09 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31


blogdrive


சசியும் அவரது கவிதைகளும் - 4

இத்தொகுப்பில் சண்முகம் சிவலிங்கத்தின் 54 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் 1967 முதல் 1988 வரையுள்ள கடந்த 22 ஆண்டுகாலத்தில் எழுதப்பட்டவை. இந்த இரண்டு தசாப்தங்களில் கவிஞருக்குள்ளும் கவிஞருக்கு வெளியே சமூகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சிகளை, மாற்றங்களை இந்தக் கவிதைகளில் நம்மால் இனம்காணமுடிகிறது.


1960கள் ஈழத்து இலக்கிய வரலாற்றில் முற்போக்கு இலக்கியக் கோட்பாடு ஆதிக்கம் செலுத்திய காலம். 70களிலும் இதன் தொடர்ச்சி இருந்தது. இது அன்றைய சமூக, அரசியல் நிலைமைகளின் இலக்கிய வெளிப்பாடு. சமூக முரண்பாடுகள், வர்க்கப்போராட்டம், சமூக மாற்றம், புரட்சி சோசலிசம் என்பது எமது இலக்கியத்தின் உள்ளீடாக இருந்த காலம் அது. இக்காலத்தில் இதற்கு எதிரான, இதிலிருந்து விலகிய போக்குகள் இருந்தன. எனினும் இலக்கியத்தில் இதுவே ஆதிக்கப் போக்கும் எனலாம். இக்கால கட்டத்தில் எழுதப்பட்ட சசியின் பெரும்பாலான கவிதைகள் இப்போக்கினைப் பிரதிபலிக்கின்றன. சமூகப்பிரக்ஞையும், புரட்சிகர அரசியல் நோக்கும் அவற்றின் உள்ளீடாக உள்ளன. புதைந்து வருகிறோம். ஆலம் இலைகள், சனங்கள், சந்தியிலே நிற்கிறேன், எகிப்தின் தெருக்களிலே, ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆதாம்கள் ஆயிரம், ஆக்காண்டி, இருட்டுக் குரல்கள், வெளியார் வருகை, மண்ணில் முளைக்கும் வால் நட்சத்திரம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இக்கால கட்டத்தில் இங்கு பெருமளவில் எழுதப்பட்ட கட்டுரைப் பாங்கான, கோஷ நடை சார்ந்த படைப்புகளில் இருந்து சசியின் கவிதைகள் அவற்றின் அழகியல் வீச்சிலும் ஆழத்திலும் எவ்வளவோ உயரத்தில் இருப்பதை ஒரு நல்ல வாசகம் எளிதில் கண்டு கொள்வான்.


1970களின் பிற்பகுதியில் இருந்து குறிப்பாக 1977க்குப் பிந்திய கடந்த பத்து ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ் கவிதையின் உள்ளீடு பெரிதும் மாறியிருக்கின்றது. கடந்த பல தசாப்தங்களில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் இன ஒதுக்கல் நடைமுறைகளின் விளைவாக வளர்ச்சியடைந்த தமிழ்த்தேசியவாதம் இக்காலப்பகுதியிலேயே ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட வடிவத்தை எடுத்தது. ராணுவ ஒடுக்கு முறையும், ஆயுதப்போராட்டமும் ஏற்படுத்திய சமூகவிளைவுகளின் எதிரொலிகளே கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத்தமிழ் கவிதையின் பிரதான பொருளாகியது. இத்தகைய கவிதைகளைக் கொண்ட பல தொகுப்புகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. சேரன், ஜெயபாலன் போன்ற சில நல்ல கவிஞர்களை இக்காலகட்டம் உருவாக்கியுள்ளது. 1980களில் சசியும் இக்காலகட்டத்தின் உணர்வுகளை தன் பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய 12 கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இன்றைய வாழ்நிலையின் குரூரமான பல அம்சங்களை அவை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, பாடாத பாடல்கள், இப்போது, பிள்ளைக்கறி ஆகியவை இன்றைய வாழ்நிலையின் குரூரம் பற்றிய மனதை உறுத்தும் படிமங்களைக் கொண்டுள்ள வீச்சான கவிதைகளாகும். இத்தகைய தாக்கமான இன்னும் பல கவிதைகளை சசி இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. சசியே சொல்வதுபோல் "உண்மையான கருத்துச் சுதந்திரம் பெயரளவில்கூட இல்லாத இந்தப் பயங்கரமான நாட்களில் ஆமை போல் ஐந்தடங்கி ஊமையாக" இருக்க நிர்ப்பந்திக்கும் உள்ளச்சமே இதற்குக் காரணமாகும்.

- எம்.ஏ.நு·மான்

பகுதி - 5


ச.சி. @ 12/28/2003   Make a comment                                                        முகப்பு


சசியும் அவரது கவிதைகளும் - 5


கவிதை கவிஞனின் சமூக, அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச் சாதனம் மட்டுமல்ல; அது அவனது முழுமையான உணர்வுலகையும் தழுவி நிற்பது. மொத்தமான வாழ்க்கை அனுபவத்தின் ஒரு வெளிப்பாட்டுச் சாதனம் அது. இரத்தமும் சதையும் உள்ள எல்லா மனிதர்களையும் போலவே கவிஞனும் பல்வேறு வகையான வாழ்க்கை அனுபவங்களுக்கு உள்ளாகிறான். அதனாலேயே 'எகிப்தின் தெருக்களிலே' எழுதிய ஒரு கவிஞனால் 'இன்று இரவு' எழுதுவதும் சாத்தியமாகின்றது. இது கவிஞர் மனிதனாக இருப்பதன் அடையாளம். அவன் தன் இருத்தலுக்குப் பிரக்ஞையாக இருப்பதன் அடையாளம். ஆனால் நமது பெரும்பாலான கவிஞர்களைப் பொறுத்தவரைகவிதை இத்தகைய ஒன்று அல்ல. பலருக்கு அது சமூக மாற்றத்துக்கான ஒரு கருவி மட்டும்தான். சமூக, அரசியல் பிரச்சினைகளைச் சொல்வதற்கு மட்டுமே அவர்கள் கவிதையைப் பயன்படுத்துகின்றனர்; பயன்படுத்தவேண்டும் என்கின்றனர். வேறு பலருக்குக் கவிதை, வடிவம் சார்ந்த ஒரு பரிசோதனைக் கருவிதான். எதிர்க்கவிதை, படிமக் கவிதை, ஹைக்கூக் கவிதை என எழுதி, தாங்களே இவற்றை தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியதாகவும் சுயதிருப்தி உறுவர். இவர்களைப் பொறுத்தவரை கவிதை மூளை சார்ந்தது. தங்கள் கெட்டித்தனத்தைக் காட்டும் ஒரு வித்தை. தங்கள் சுயத்தில் குரல் அல்ல. இவர்கள் எல்லாருமே தங்கள் சுயத்தின் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு தங்களுக்குச் சமூக அங்கீகாரம் பெற்றுத் தரக்கூடிய ஒரு சிறு பகுதியை மட்டும் கவிதைக்குள் கொண்டு வருபவர்கள். அந்த வகையில் ஒற்றைப் பரிமாணிகள்.


சண்முகம் சிவலிங்கம் இவர்களுள் ஒருவரல்ல. அவர் தன் சுயத்தை முழுமையாக வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதை விரும்பும் ஒரு கவிஞர். "இருத்தலும் இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும்" முக்கியமானது என்று கருதுபவர். தனது மூல விக்கிரகத்தை நாம் காணவேண்டும் என்பதற்காக, அதில் நமது மூல விக்கிரகத்தையும் தரிசிக்கவேண்டும் என்பதற்காக-தன்னைத் திரை நீக்கிக் காட்டுகிறார். அவர். எல்லா நல்ல கவிஞர்களினதையும் போல அவரது முகமாக இருக்கிறது. அவரின் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகின்றது. அவரது உணர்வுகளையெல்லாம் பிரதிபலிக்கிறது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணஙக்ளை அவரது கவிதைகள் மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள் (personal poems) அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப்பற்றிய கவிதைகள்தான்.


சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு சசி எழுதிய கவிதை நீர்வளையங்கள். இது அவரது முக்கியமான தன்நிலைக்கவிதைகளுள் ஒன்று. அவரின் மனக்குளத்தில் வீசப்பட்ட ஒரு கல் எழுப்பும் நீர்வளையங்களாக- உணர்வலைகளாக- அமைகிறது கவிதை. மென் உணர்வுகளும் இலட்சியங்களும் நிறைந்த 29 வயது இளம் கவிஞனின் இதயக் குரலாக அது அமைந்துள்ளது. 'ஏகமும் நாம் என்று எண்ணுபவர்களுக்கு' எதிர்வினையுமாகும் அது.

'எச்சிறிய புல்லும் அதன் இயல்பினிலே முழுமை இடுகாட்டில் முளைக்கின்ற கழனியும் ஓர் அருமை' என்பது கவிஞனின் தரிசனம்.


'நீர்வளையங்கள்' இத்தொகுப்பின் தலைப்பாகவும் இருப்பது இதற்கு ஒரு குறியீட்டுத்தன்மையும் தருகின்றது. ஒவ்வொரு கவிதையும் வெளித் தாக்கத்தினால் கவிஞனின் மனக்குளத்தில் எழும் நீர்வளையங்கள்தான் என்பதை இது குறித்து நிற்கிறதுபோலும்.

1977க்குப் பிந்திய பத்தாண்டுகள் சசியின் தனிப்பட வாழ்க்கையிலும் நெருக்கடிகள் மிகுந்த காலம். விரக்தியும், சோர்வும், நீராசையும் அவரை ஆட்கொண்ட காலம் இது. அவரது சொந்த மனமுறிவுகள் இக்காலத்தில் எழுதப்பட்ட பல கவிதைகளில் பதிவாகியுள்ளன. நிலவும் ஒரு வழிப்போக்கனும், மறுதலை, வெறும் வரிகளும் ஒரு முன் இளவேனிலும், நத்தைச் சுகம், தவறிய பருவங்கள், ஒரு பிரியாவிடை, மீண்டும் எழுந்திருக்கையில், மரியாத உயிர்ச் சுவடும் விலகிச் செல்லும் மையங்களும் முதலியவை இத்தகையன. சிலவேளை நீராசையை ஒரு வாழ்வியல் தத்துவமாகக் காணவும் இவர் தூண்டப்பட்டுள்ளார். மறுதலையில் இந்த நோக்கு கூர்மையாக வெளிப்படுகின்றது. சிலவேளை இவர் தன்னை அளவு மீறி நசித்துத் துன்புறுத்துகிறார் என்று தோன்றுகிறது. மறுதலை, வெறும் வரிகளும் ஒரு முன்இளவேனிலும், ஒரு பிரியாவிடை, மீண்டும் எழுந்திருக்கையில், விலகிச்செல்லும் மையங்கள் போன்றவற்றில் இதுவே நிகழ்ந்துள்ளடு. சுயதுன்புறுத்தலின் சாயலை நான் இவற்றில் காண்கிறேன். 'நான் அது அல்ல, அது என்னில் உள்ளதல்ல' என தன்னையே நிராகரித்தலும், தன்னை ஒரு living fossileஆக, xiphosurdaeஆக காண்பதும் என்னைப் பொறுத்தவரை அவரைப்பற்றி அவருக்குள் நிகழும் ஒரு பொய்த்தோற்றமாக(illusion) ஒரு திரிபுக் காட்சியாகவே இருப்பினும் அதன் மூலம் நமக்குச் சில நல்ல கவிதைகள் கிடைத்துள்ளன. மறுதலை, விலகிச் செல்லும் மையங்கள் என்பன தமிழில் மிகவும் வித்தியாசமான கவிதைகள்தான்.

- எம்.ஏ.நு·மான்

பகுதி - 6


ச.சி. @ 12/29/2003   Make a comment                                                        முகப்பு


சசியும் அவரது கவிதைகளும் - 6


தற்காலத் தமிழில் சசி ஒரு வித்தியாசமான, தனித்துவமான கவிஞர் என்று ஏற்கனவே சொன்னேன். இவர் முலம் நவீன தமிழ்க் கவிதை சில சிகரங்களை எட்டியிருக்கிறது என்பதை இத்தொகுப்பை படிப்பவர்கள் காண்பார்கள். சந்தியிலே நிற்கிறேன், மண்ணும் மனிதரும், ஆக்காண்டி, பரவளைவுக்கோடு, மென்மையின் தளைகளிலிருந்து, ஆதாம்கள் ஆயிரம், மறுதலை, மரியாத உயிர்ச்சுவடும் விலகிச் செல்லும் மையங்களும், வெளியார் வருகை என்பன எனக்கு சில சிகரங்களாகத் தெரிகின்றன. வேறு சிலருக்கு வேறு சில சிகரங்கள் தெரியலாம். ஆனால், அற்பம் என்று ஒதுக்கக்கூடியவை இந்தத் தொகுப்பிலே யாருக்கும் அதிகம் கிடைக்காது என்றே சொல்வேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் சில கவிதைகள், உதாரணத்துக்கு, ஒரு ஞாயிற்றுக்கிழமை இன்னும் சற்று செறிவாக இறுக்கமாக அமைந்திருக்கலாம் என்று தோன்றினாலும் 'நான்காம் இரவு' தவிர மற்ற கவிதைகள் எல்லாவற்றிலுமே சசியின் முத்திரை பளிச்சிடவே செய்கின்றது.


சிவலிங்கம் தன் கவிதைகள்பற்றி ஒருபோதும் பெருமைப் பட்டுக்கொண்டவர் அல்ல. இத்தொகுப்பில் உள்ளவற்றுள் சுமார் மூன்றில் ஒரு பங்குக் கவிதைகள்தான் இதுவரை பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றைக்கூட கவனமாக சேர்த்து வைத்துப் பேணும் பழக்கம் அவரிடம் இல்லை. எழுதியவற்றில் கை எழுத்துப் பிரதியிலேயே காணாமற்போனவை பல. அவருடைய பெரும்பாலான கவிதைகளுக்கு நான்தான் முதல் வாசகனாக இருந்திருக்கிறேன். சிலவற்றுக்கு இன்றுவரை நான் மட்டும்தான் வாசகனாக இருந்திருக்கிறேன். நீண்டகால வற்புறுத்தல்களுக்குப் பிறகு சங்கோசத்துடன் என்றாலும் இந்தத் தொகுப்பை வெளிவிட அவர் சம்மதித்திருக்கிறார். இத்தொகுப்பின்மூலம் இன்றைய தமிழ்க் கவிதை ஒரு புதிய 'வெளிச்சத்தைப்' பெறும் என்பதே என் நம்பிக்கை.


-எம்.ஏ.நு·மான்
27.10.1988


நன்றி: 'நீர் வளையங்கள்' தமிழியல் வெளியீடு. கிடைக்குமிடம்: க்ரியா, 268
ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-14


ச.சி. @ 12/30/2003   Make a comment                                                        முகப்பு


(முந்தையது)

(அடுத்தது)Next Page