தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும்
மோதித் தெறித்து
மெல்ல முனகி அழுவதுபோல்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
பக்கத்தில் ஒரு கோயில்
அதன்பக்கத்தில் ஒரு அரவு-
சொர்க்கத்தின் வழிபோல
இலை சோவெனக் கலகலக்கும்.
சற்று அப்பால் ஆலைகளில்
சருகுதிரும்.
இடைவெளியில் திக்கற்ற கன்றொன்று
தாயைத் தேடிவரும் - அப்போதும்,
தூரத்தில் நான் கேட்டேன்.
உலகருகே நிற்பேன்,
ஊரைக்காவலிடும் தென்னைகளில்
படரும் இருள் தூரத்தில்
அஞ்சிப்பறக்கும் சிலபறவை
தொடரவரும் பிறப்பெல்லாம்
எங்கோ தூரத்தில் கேட்டதுபோல்
குரலும் அதுகேட்கும்
என் குழந்தை நினைவெல்லாம்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
- சண்முகம் சிவலிங்கம்.
(நன்றி: 'நீர் வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)
ச.சி. @ 12/5/2003
முகப்பு
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.
கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.
கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.
கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வண்டிகள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.
கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.
கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.
நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.
சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.
வீதி சமைத்தேன்.
விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.
ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.
கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.
கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மி யழவில்லை.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு வளர்ந்ததும்
குடல் சுருங்கி நின்றார்கள்.
பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.
கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.
வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.
சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்.
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.
"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்.
செத்து மடிந்தாரோ?
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆன வரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்.
போனவரைக் காண்கிலனே.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
ச.சி. @ 12/8/2003
முகப்பு
சிவப்புப் பூக்கள்
முள் முருக்கம்.
மைனாக்கள் வரும், போகும்.
இலைகள் உதி - ர் - ந் - து
வெறும் கிளைகள்
முட்களுடன்.
நுனிகளில்
வளைந்த பூந்தண்டுகள்.
அடியில் உள்ள பெரியபூக்களை
மைனா கோதும்.
அவை பின்னரும் கோத,
நுனியில்
வரவர, சிறிய
நலிந்து நீண்ட
மொட்டுகள்,
நண்டின் பூப்போல,
ஆமாம்
நண்டின் பூப்போல.
அம்மா சொன்னாள்!
நண்டு சினைக்க
பூக்கும் முள்முருக்கு.
முள்முருக்குப் பூக்க
சினைக்கும் நண்டுகள்.
நாளைக் காலை
சந்தைக்குப் போகலாம்.
- சண்முகம் சிவலிங்கம்.
(நன்றி: 'நீர்வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)
ச.சி. @ 12/10/2003
முகப்பு
(சண்முகம் சிவலிங்கம் 'நீர்வளையங்கள்' கவிதைத் தொகுப்பில் எழுதிய கட்டுரை)
எனது கவிதைகள் பற்றி நான் எதுவும் இந்த தொகுதியில் எழுதுவது அவசியமில்லை என்றே (இதை எழுதும்) இரண்டு நாட்களுக்கு முன்புவரை எண்ணியிருந்தேன். உண்மையில் நண்பர் நு·மானுக்கும் என் ஆழ்ந்த அன்புக்குரிய திரு.ஆர். பத்மநாப ஐயருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக "வெளிச்சத்துக்கு வருதல்" என்னும் சில வரிகளை முகப்பு வெற்றிலையாக அமைத்திருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு பரிதாபத்துக்குரிய என் நாட்டில் நடந்த சில சம்பவங்கள் என் முடிவை அடியோடு மாற்றிவிட்டன.
எனது நாட்டின் இலக்கிய வரலாற்றில் அறுபதாம் ஆண்டுகள் மிக முக்கியமானவை.எழுபதாம் ஆண்டுகள், குறிப்பாக எழுபத்திரெண்டுக்கு பிற்பட்ட தசாப்தப்பகுதி அறுபதுகளில் ஏற்பட்ட சில வளர்ச்சிப் போக்குகளை நிதானிப்பதாகவும், மறுகண்ணோட்டம் செலுத்துவதாகவும் அமைந்தது. எண்பதுகளில், 83க்கு பிற்பட்ட காத்திரமான படைப்புகள் ஒரு திடீர் திருப்பம் பெற்றவைகளாக அமைந்தன. இந்தப் போக்குகள், இலங்கையின் பொதுத் தேசிய உணர்வோட்ட பரிணாமத்திலிருந்து, இன ஒடுக்குமுறையின் காரணமாக எழுச்சி பெற்ற தமிழ் தேசியவாத வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டவை என்பது இன்று எல்லோரும் கிரகித்துக் கொள்ளகூடிய ஒன்று.
என்னுடைய முன்னுரைப் பிரச்சினை 83க்கு பிற்பட்ட வளர்ச்சிப் போக்கால் ஏற்படுகிறது. முக்கியமாக 87க்கு பிற்பட்ட இன்றைய நெருக்கடி நிலைமை தொடர்பானது. 87க்கு பிற்பட்ட நெருக்கடி சிலவேளை 83க்கும் 86க்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து வேறுபடாததொரு தோற்றம் காட்டுவதால் மொத்தமாக இன்று 83க்கு பிற்பட்ட தேசிய பிராந்திய நிகழ்வுகளைப் பொறுத்தமட்டில் 'ஆமை போல் ஐந்தடக்கி' ஊமையாக வேண்டியுள்ளது. 1970ல் எழுதப்பட்டு எப்படியும் 83க்கு முன்பு யேசுராசாவின் 'அலை'யில் வெளிவந்திருக்கக்கூடிய எனது 'வெளியார் வருகை' இதில் சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி சற்று முன்புவரை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. உண்மையான கருத்துச் சுதந்திரம் பெயரளவில் கூட இல்லாத இந்த பயங்கரமான நாட்களில், எனது 'வெளியார் வருகை' 1970ம் ஆண்டின் ஓர் அதிகாலைக் கனவு என்பதை இன்று யாராவது நம்ப மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 87க்கு முன்பு 'மரணத்துள் வாழ்வோம்' தொகுத்த யேசுராசா முதலியோர் எனது 'வெளியார் வருகை'யின் கடைசிச் சொற்கள் இரண்டையும் தமது தொகுதிக்கு ஏற்ற நாமமாக தெரிவு செய்திருந்தாலும் அந்தக் கவிதையை அவர்கள் அதன் கால அடைவு காரணமாக அன்று புரக்கணிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று அது அவர்களால் முடியுமா என்பது சந்தேகம். அத்தகைய ஒரு மயக்கநிலை இன்று உருவாகியுள்ளது.
இந்த நிலையில் வாசகர்கள், குறிப்பாக தமிழ் நாட்டு வாசகர்கள். இந்த தொகுதியை இலங்கைத் தமிழ் தேசியப் போராட்டத்துடன் அவ்வளாவு சம்பந்தப்படாத 83க்கு முந்திய கவிதைகளாகவே கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஆமை போல் ஐந்தடக்கிய அந்த ஊமைக் குரல்கள் பின்னொரு நாளில் வெளி வரக்கூடும். 83க்கும் 87க்கும் பிற்பட்ட கவிதைகள் ஒரு கால நிறைவுக்காக இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதான் நான் முக்கியமாக சொல்ல விரும்பியது. வேறென்ன சொல்வது? எல்லோரும் சொல்வது போல நானும் சொல்லலாம்: இந்த கவிதைகளில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. வேதனையும் விரக்திகளும் உண்டு, அவை தந்த வெளிச்சங்களும் உண்டு. இந்த வெளிச்சங்களைத்தான் நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். இன்பத்தினூடும் துன்பத்தினூடும், வேதனையூடும் விரக்தியினூடும் வரும் எனது வெளிச்சத்தைக் காணுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை. வெளிச்சம் ஒன்றைத் தருவதுதான் ஒரு கலைப் படைப்பின் வாழ்தலுக்கான நியாயம் என நான் கருதுகிறேன். எனது, 'காற்றிடையே'வில் என்ன வெளிச்சத்தைக் காண்கிறீர்கள், எனது 'நண்டும் முள்முருக்கு'வில் என்ன வெளிச்சத்தைக் காண்பீர்கள் என்பதெல்லாம் எனக்கு முக்கியம். இருத்தலும், இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும்கூட முக்கியமான வெளிச்சங்கள் எனப்து வெளிச்சமானால் சரி. எனது 'சனங்கள்'இல் கூட வெளிச்சத்தைக் காணாதவர்கள் முன்பு இருந்தார்கள். இப்போது எப்படியோ? எனது கவிதைகளில் சிலது கருகலானவை எனச் சொல்பவர்கள் பலர். அவர்களை நோக்கியே 'கறுத்த புள்ளிகளை' எழுதினேன். கறுத்தப் புள்ளிகள் அவர்களுக்கு இன்னும் கருகலாகத் தெரியக்கூடும். 'மென்மையின் தளைகள்' சற்றுக்கூடுதலான உள் இடைவெளிகளை உடையவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அந்த வினாடிகளின் அழுத்தமும் அமுக்கமும், தொலைவும் தொலைவுக் சுருக்கமும் அப்படி. உள் இடைவெளிகளின் ஊகமும் உள்ளுணர்வுமே சிலவேளை வாசகனின் வெளிச்சமாய் அமையக்கூடும்.
இந்தத் தொகுதி வருவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தவர் (என் தொடர்புகள் சம்பந்தப்பட்ட மட்டில்) என் பெருமதிப்புக்குரிய திரு.பத்மநாப ஐயர் அவர்கள். இலங்கைத் தமிழ்நூல் வெளியீட்டில் அவரும் யேசுராசாவும் ஆற்றியுள்ள பணி கணிசமானது. எனக்கும் ஐயருக்குமிடையில் ஒரு பாலமாய் அமைந்த நண்பர் நு·மான் என்னுடைய கவிதைகளின் உள்ளும் புறமுமான உணர்வுகளில் பல இடங்களில் நுழைகிறார். எனது விலகிச் செல்லும் மையங்களில் அவரும் ஒன்று. இந்தத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதி உதவுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இருவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தக் கவிதைகளில் சில ஜீவாவின் 'மல்லிகை'யிலும், சேரனின் ஆதரவில் 'புதுசு'விலும் யேசுராசாவின் 'அலை'யிலும், நு·மானும் நானும் வெளியிட்ட 'கவிஞர்' இலும்வெளிவந்தன. இவர்களுக்கும், மற்றும் இதனை வெளியிட முன்வந்த தமிழியல் பதிப்பகத்தாருக்கும் இதனை நல்ல முறையில் அச்சிடும் பணியில் ஈடுபட்ட மிதிலா அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள் உரியன.
-சண்முகம் சிவலிங்கம்
'அமலபதி'
பாண்டிருப்பு
கல்முனை (இலங்கை)
('நீர்வளையங்கள்', தமிழியல், சென்னை)
ச.சி. @ 12/15/2003
முகப்பு
சசியும் அவரது கவிதைகளும் - 1
(எழுத்தாளர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் 'நீர்வளையங்கள்' கவிதைத் தொகுப்பில் எம்.ஏ.நுஹ்மான் எழுதிய முன்னுரை)சமகாலத் தமிழ்க் கவிதையில் அதிக பரிச்சயமும், ஆழ்ந்த கலை உணர்வும் உள்ள வாசகனுக்கு சண்முகம் சிவலிங்கத்தின் (சசி) கவிதைகள், அவை பற்றி நான் சொல்வதை விட அதிகமாகவே சொல்ல வல்லன. என்றாலும் சசிக்கும் எனக்கும் இடையேயுள்ள தொடர்பின் காரணமாகவும் நீண்ட காலமாக நானே அவரது முதல் வாசகனாக இருந்தவன் என்பதனாலும் அவரைப்பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் ஓர் அறிமுகக் குறிப்பாக சிலவற்றைக் கூறலாம் என்று நினைக்கிறேன்.
சசியே சொல்வது போன்று அவரது கவிதைகளில் "உள்ளும் புறமுமான உணர்வுகளில் பல இடங்களில் நுழைந்திருப்பவன்" நான் நீர் வளையங்களில் அவர் விளிக்கும் நண்பன் நான்தான். நாங்கள் இரு தும்பிகளில் வரும் இரண்டாம் தும்பியும் நாந்தான். பரவளைவுக் கோட்டிலும் நான் இருக்கிறேன். விலகிச் செல்லும் மையங்கள் என்னை நோக்கியதுதான். அந்த அளவுக்கு சசியும் நானும் நெருங்கி இருந்திருக்கிறோம். அவர் எனது நண்பர். என்னைவிட ஐந்து வயது அதிகமான - எனினும் தோற்றத்தில் என்னைவிட ஐந்துவயதேனும் குறைவான நண்பர். அறுபதுகளின் பின் அரைவாசியில் நாங்கள் சந்தித்தோம். கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் கவிதை எங்கள் நட்பை வளர்த்திருக்கிறது. 1969ல் நாங்கள் இருவரும் சேர்ந்து கவிஞன் என்ற காலாண்டு இதழை வெளியிட்டோம். அதன் வெளியீட்டில் என்னைவிட அதிக பங்கு வகித்தவர் சசி. தன் முனைப்பு அற்ற தன்னை ஒளித்துக்கொள்ளும் அவரது சுபாவத்தின் காரணமாக அதன் தொகுப்பாளராக எனது பெயரே இடம்பெற நேர்ந்தது. அவரது ஆரம்ப காலத்தில் எனது பாதிப்பு தன்னில் இருப்பதாகவு அவரே கூறும்போதிலும் எனது ஆதர்சமாகவும் நான் விரும்பி வியந்து படிக்கும் கவிஞராகவும் அவர் விரைவாகவே வளர்ந்துவிட்டார் (எனினும் கவிதையில் எனது பாணி வேறாகவும் அவரது பாணி வேறாகவுமே இருந்து வருகின்றது. எங்கள் தனித்துவம் அப்படி.) இன்று தனது விலகிச் செல்லும் மையங்களில் என்னையும் ஒன்றாக அவர் கருதிய போதிலும் அது ஒரு பிரமைதான். என்னைப் பொறுத்தவரை இன்றும் அவர் என் நெருங்கிய நண்பர்தான். நான் மனம் நெகிழ்ந்து நினைவு கூறும் மிகச் சில நண்பர்களுள் அவரும் ஒருவர்.
சண்முகம் சிவலிங்கம் கிழக்கிலங்கையில் பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் 1939ல் பிறந்தவர். அவர் பிறந்தது ஒரு வைதீக இந்துக் குடும்பத்தில். அவரதுபெயரே அதைச்சொல்லும். ஆனால் இளம் வயதில்-பாடசாலை காலத்திலேயே- கத்தோலிக்கராக மதம் மாறியவர். (விலகிச் செல்லும் மையங்களில் அவர் குறிப்பிடும், பதினொரு வயதில் அவரை ஊடுருவிய நாடிவாலாவின் செல்வாக்கு அதற்குக் காரணமாக இருக்கலாம்.) அதன் பொருட்டு வீட்டில் அடி உதைகள் வாங்கியவர். ஒரு கத்தோலிக்க குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். ஆறு ஆண் பிள்ளாஇகளின் தகப்பன். அவரது கிராமத்தில் ஸ்ரீபன்(மாஸ்டர்) என்ற கிறிஸ்தவப் பெயராலேயே இன்றைக்கும் பலர் அவரை அறிந்து வைத்திருக்கின்றனர். கேரளத்தில் படித்து விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர் அவர். கடந்த 25 ஆண்டுகளாக விஞ்ஞான ஆசிரியராக தொழில் புரிபவர். தத்துவார்த்த ரீதியில் ஒரு பொறுள்முதல்வாதியாக பரிணமித்திருக்கிறார். அவரது கவிதைகள் பலவற்றின்-- குறிப்பாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆதாம்கள் ஆயிரம், எமது பாடுகளின் நினைவாக போன்றவற்றின் அனுபவ அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாவும் அவரது கவிதைகளில் பரவிக் காணப்படும் விஞ்ஞானக் குறியீடுகளின் பின்னணியை விளங்கிக்கொள்ளவும் அவரைப்பற்றிய இந்தச் சிறுகுறிப்பு உதவக்கூடும்.
பகுதி - 2
ச.சி. @ 12/25/2003
முகப்பு